விருதுநகர் கோர்ட்டில் ரூ.28 லட்சம் கையாடல்

விருதுநகர் கோர்ட்டில் ரூ.28 லட்சம் கையாடல் செய்ததாக நீதிபதி அளித்த புகாரின்பேரில் முன்னாள் ஊழியர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-11-22 22:09 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிபதி சரண், கடந்த 2017 -2018, 2018 -2019-ம் ஆண்டு விபத்து தொடர்பான நிதிகணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது கோர்ட்டில் விபத்து தொடர்பாக இருந்த பணம் ரூ.28 லட்சத்து 10 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தார். இதுதொடர்பாக அவர் விசாரணை மேற்கொண்டார். தனது விசாரணையின் அடிப்படையில் கோர்ட்டில் தலைமை எழுத்தராக இருந்து ஓய்வு பெற்றுள்ள அருப்புக்கோட்டை காயிதே மில்லத் கிழக்கு தெருவை சேர்ந்த உசேன் அக்பர் என்பவர், அவரது நண்பர்கள் அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது வங்கி கணக்கில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம், அரக்கோணம் அசோக் நகரை சேர்ந்த கோகுல கிருஷ்ணமூர்த்தி என்பவரது வங்கி கணக்கில் ரூ.13 லட்சத்து 60 ஆயிரம், அருப்புக்கோட்டைஅஜீஸ் நகர் தெருவை சேர்ந்த செய்யது முகமது வங்கிக்கணக்கில் ரூ.7 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ.28 லட்சத்து 10 ஆயிரத்தை மோசடியாக செலுத்தியது தெரியவந்தது.

4 பேர் மீது வழக்கு

அதன்பேரில் நீதிபதி சரண், விருதுநகர் மாவட்ட குற்ற தடுப்புப்பிரிவு போலீசில் 4 பேர் மீதும் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு கோர்ட்டு முன்னாள் தலைமை எழுத்தர் உசேன்அக்பர் மற்றும் அவரது நண்பர்கள் சண்முகசுந்தரம், கோகுல கிருஷ்ணமூர்த்தி, செய்யது முகமது ஆகிய 4 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்