7 வயது சிறுவனை பூசாரியாக நியமித்ததை எதிர்த்து வழக்கு அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

குலதெய்வம் கோவிலுக்கு 7 வயது சிறுவனை பூசாரியாக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குக்கு இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-23 20:50 GMT
சென்னை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வமான கெத்தை அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு பூஜை உள்ளிட்ட விழாக்களை படுகர் இன மக்களே செய்துவந்தனர். இந்தநிலையில் கோவிலின் நிர்வாகச் சிக்கல் காரணமாக கடந்த 1994-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோவில் கொண்டுவரப்பட்டது.

தற்போது இந்தக் கோவிலுக்கு கோபாலகிருஷ்ணன் என்பவரது 7 வயது மகன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளான். ஏற்கனவே இந்தக் கோவிலுக்கு இதுபோல சிறுவர்கள் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி பாதிப்பு

ஆனால் இவ்வாறு பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது. அவர்களது உணவை அவர்களே சமைத்துச் சாப்பிட வேண்டும். கோவிலில் வளர்க்கப்படும் பசுக்களின் பாலைக் கறந்து, அதில் இருந்து நெய் தயாரித்து கோவில் விளக்குகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

சிறுவர்கள் பூசாரியாக நியமிக்கப்படுவதால், அவர்களது கல்வி தடைபடுகிறது. இது கட்டாய கல்வி சட்டத்துக்கு எதிரானது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரிக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கல்வி வழங்கப்படுகிறது

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மாவட்ட கல்வித்துறை அதிகாரி சார்பில் தாக்கல் செய்த பதில்மனுவில், ‘கெத்தை அம்மன் கோவிலுக்கு பல நூற்றாண்டுகளாக 5 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களை பூசாரியாக நியமித்து வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் இந்த சடங்குகளை உடைக்க முடியாது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவன் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஆகஸ்டு மாதம் மாற்றுச்சான்றிதழை அவனது பெற்றோர் வாங்கிச்சென்றுள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் சிறுவனின் படிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவனுக்கு கிராம மக்கள் மற்றும் கல்வித்துறை மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஏற்கனவே இதேபோல் பூசாரிகளாக நியமிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் கல்வி வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

அதையடுத்து இந்த வழக்குக்கு இந்து சமய அறநிலையத்துறை பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்