புறம்போக்கு நிலத்தை மீட்கக்கோரி வழக்கு: மாநகராட்சி ஆணையர் வரைபடத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கக்கோரிய வழக்கிற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் வரைபடத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-25 18:55 GMT
சென்னை,

நுங்கம்பாக்கம், புஷ்பா நகரில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் எங்களது குலதெய்வம் கோவிலான புற்றுக்கோவில் இருந்தது. அண்மையில் இந்த கோவிலுக்கு சென்றபோது, அங்கிருந்த கோவில் இடிக்கப்பட்டு இருந்தது. நிலத்தை பி.சி.பாஷியம் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். அதாவது சர்வே எண்ணை மாற்றி குறிப்பிட்டு, அரசு புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வாங்கியுள்ளார். இந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்று 1896-ம் ஆண்டு முதல் அரசு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.

பட்டா

அதுவும் இந்த புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வழங்கிய அனைத்து நடவடிக்கையும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் 25 நாட்களுக்குள் நடந்துள்ளது. பி.சி.பாஷியம் என்பவர் பட்டா கேட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி மனு கொடுத்துள்ளார் இதை சர்வே துறை சப்-இன்ஸ்பெக்டர் சரி பார்த்து, சர்வே துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். ஜனவரி 13-ந்தேதி அதை சரி பார்த்து துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், 29-ந்தேதி அறிக்கை கொடுத்துள்ளார். அதன்படி, ஜனவரி 23-ந்தேதி அந்த நிலத்துக்கு பட்டாவை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

மீட்க வேண்டும்

இதுகுறித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே, மாநகராட்சிக்கு சொந்தமான இந்த நிலத்தை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் டி.அலெக்ஸிஸ் சுதாகர் ஆஜராகி வாதிட்டார்.

அறிக்கை

இதையடுத்து, மனுதாரரின் புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்தும், அந்த பகுதியின் நில வரைபடத்துடன் சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை டிசம்பர் 21-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்