தமிழகம் முழுவதும் இன்று 12-வது மெகா தடுப்பூசி முகாம்...!

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 12-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-11-28 01:45 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்தநிலையில் 12-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தமிழகத்தில் ஒரு கோடி அளவில் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கும் நிலையில், காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து 12-வது மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 77.02 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடந்த 11-வது மெகா தடுப்பூசி முகாமில் தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 200 வார்டுகளிலும் 1,600 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், 9 லட்சத்து 60 ஆயிரத்து 465 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்