வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு வழங்கினர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு ஆகியோர் வழங்கினர்.

Update: 2021-11-28 19:20 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று வழங்கினார்.

காலை 9 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள காமாட்சி மீனாட்சி திருமண மண்டபத்தில் தி.மு.க. சேப்பாக்கம் பகுதி செயலாளர் மதன் மோகன் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் தையல் எந்திரங்கள், ஆன்லைன் மூலம் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு செல்போன்கள், லேப்டாப்கள், சைக்கிள்கள், மிக்சிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பைகள் ஆகியவை சுமார் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினர்.

புதிய ஆட்டோ

இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு, ராஜா அண்ணாமலை மன்றத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எ.வ.வேலு 300 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களுடன் ரூ.500 பண முடிப்பும் வழங்கினார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டோ டிரைவருக்கு புதிய ஆட்டோ வழங்கினார்.

பின்னர் காலை 11 மணிக்கு வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலா ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பைமுடிப்பு சுமார் 500 பேருக்கு வழங்கினர்.

வெள்ள பகுதிகளில் ஆய்வு

மேலும் செல்விநகர் 70 அடி சாலையில் உள்ள வடிகால்களில் மழைநீர் தேங்காமல் வடிவதை எ.வ.வேலு பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து குமரன் நகரில் உள்ள வடிகால்களில், மழைநீர் தேங்காமல் ஓடுகிறதா? என்று எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்