கனமழையால் வீடு இடிந்து 3 வயது சிறுமி பலி :ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2021-12-06 07:41 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இந்தநிலையில் இம்மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. இருப்பினும் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளது.பலத்த மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 13 வீடுகள் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தன. வீடுகள் விழுந்ததில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும்  இல்லை. 

இந்த கனமழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2-வது முறையாக மழைநீர் கோவிலுக்குள் புகுந்து உள்ளது. 

கனமழை தொடர்ந்து பெய்ததால் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்  நடந்த இடிபாடுகளில் சிக்கி காடேஸ்வரன் என்பவரது 3-வயது மகள் உயிரிழந்துள்ளார்.
 
சம்பவம் நடந்தபோது வீட்டில் சிறுமி  தூங்கி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்