கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் தமிழக அரசு உத்தரவு

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-12-06 23:21 GMT
சென்னை,

மத்திய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியுதவிகளை வழங்குவதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஆணை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு ஒன்றில் கடந்த ஜூன் 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு ஆணை ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக குடும்பத்தினர் யாராவது உயிரிழக்க நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது.

ரூ.50 ஆயிரம்

அதனடிப்படையில் கொரோனாவினால் உயிரிழப்பு நேரிடும்போது அந்த குடும்பத்தாருக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதோடு, 2015-ம் ஆண்டு வகுக்கப்பட்ட இலவச நிவாரண உதவி என்பதில் திருத்தங்களை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்தது. அந்த திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தால், அது கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை வழங்கலாம்.

பொருந்தாது

கொரோனா தொற்றினால் குடும்பத்தினர் மரணமடைந்த நிலையில், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் (முன்கள பணியாளர்கள்) பெற்றவர்கள்; இரண்டு பெற்றோரையும் இழந்து ரூ.5 லட்சம் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து ரூ.3 லட்சம் பெற்ற குழந்தைகளுக்கு இந்த அரசாணை பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

36,539 பேர் மரணம்

கொரோனா தொற்றால் தமிழகத்தில் நேற்று வரை 36,539 பேர் மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்