கல்லூரி மாணவர், வியாபாரியின் மர்ம மரணம்: உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை

கல்லூரி மாணவர், வியாபாரியின் மர்ம மரணங்கள் மீது உரிய விசாரணை நடத்தி உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2021-12-07 23:09 GMT
சென்னை,

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் பெட்டிக்கடை வியாபாரி உலகநாதன் (வயது 63), ரெய்டுக்கு வந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாக, அப்போது போலீசாரால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழி ஏந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர், போலீசாரின் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். அவரை முதுகுளத்தூர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடிந்து வீடு திரும்பிய அவர், மர்மமான முறையில் இறந்துள்ளார். போலீசார் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என போராட்டம் நடந்து வருகிறது.

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணத்திலும், வியாபாரி உலகநாதன் மரணத்திலும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால், இவ்வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்த தி.மு.க. அரசை கேட்டுக்கொள்கிறேன்.

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதை பொறுப்புள்ள எதிர்க்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. இந்தநிலை தொடர்ந்தால் மக்கள் வீதிகளில் வந்து போராடும் நிலை உருவாகும்.

ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்:-

தி.மு.க. அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. மக்களிடையே ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் ராமநாதபுரத்தில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் மரணம் குறித்து தீர விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதேபோல விழுப்புரத்தில் உலகநாதன் என்ற விவசாயி, அவரது மனைவியுடன் சேர்ந்து நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சுண்டல், போண்டா விற்பனை செய்தபோது, அரகண்டநல்லூர் போலீசார் அதை தடுத்ததாகவும், இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வில் உலகநாதன் கீழே விழுந்து உயிரிழந்தார் என்றும், இதுகுறித்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

போலீசாரின் மெத்தன போக்கு

இந்த இரு நிகழ்வுகளுக்கும் போலீசாரின் மெத்தன போக்கே காரணம். காவல் துறையினர் திறமையாக கையாண்டு இருந்தால் இந்த 2 உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது. இந்த மெத்தன போக்கிற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு மணிகண்டன், உலகநாதன் ஆகியோரின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படவும், இதுபோன்ற உயிரிழப்புகள் இனி வருங்காலங்களில் ஏற்படா வண்ணம் பார்த்து கொள்ளவும், உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு அரசு உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கவும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நீதி விசாரணை தேவை

இதேபோல நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.ரபிக் அகமது உள்ளிட்டோரும் மணிகண்டன், உலகநாதன் ஆகியோரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்