கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 பேர் போலீசில் சரண்

சென்னை கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 2 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

Update: 2021-12-21 22:25 GMT
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு மேடு கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத புறம்போக்கு நிலத்தில் 20 வயது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 20) என்பதும், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரிந்தது.

பணம் பறிப்பு

பள்ளி மாணவிகள் சிலரிடம் செல்போன் மூலம் நட்பு கொண்ட பிரேம்குமார், அவர்களிடம் ஆபாசமாக பேசி அதனை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆபாச பேச்சு மற்றும் மாணவிகளின் புகைப்படத்தை அவர்களது பெற்றோர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று அவற்றை இணையத்தில் வெளியிட போவதாக மாணவிகளை மிரட்டி அவர்களிடம் பிரேம் குமார் அடிக்கடி பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தொடர் மனஉளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவிகள் ஒன்று சேர்ந்து, இதுபற்றி தங்களது இன்ஸ்டாகிராம் நண்பரிடம் தெரிவித்தனர். அந்த நண்பரின் தலையீட்டில் அவருடன் மேலும் சிலர் சேர்ந்து பிேரம்குமாரை கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதுபற்றி ஆரம்பாக்கம் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிளை தேடிவந்தனர்.

போலீசில் சரண்

இந்த நிலையில் நேற்று மாலை இந்த வழக்கு தொடர்பாக ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த அசோக் (21), செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரைச்சேர்ந்த லிவின் (22) ஆகியோர் சரண் அடைந்தனர்.

அவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர மேலும் 3 பேரை சேர்த்து மொத்தம் 5 பேரிடம் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்