நாளை முதல் ஊரடங்கு... டாஸ்மாக் மது கடைகளுக்கு கட்டுப்பாடு எப்படி...?

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-01-05 12:36 GMT
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று  ஒருநாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இது 1,489 ஆக அதிகரித்துள்ளது.
 
இதையடுத்து கொரோனா பரவல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவருகிறது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் உணவகங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட எதுவும் செயல்பட அனுமதியில்லை. அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளான மருத்தகங்கள், பங்குகள், உள்ளிட்டவை சேவைகள் இயங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரம் விமானம், ரயிலில் பயணம் செய்யவேண்டிய தேவை இருப்பவர்கள் பயணச் சீட்டுடன் வாகனத்தில் பயணிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், டாஸ்மாக் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தனியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. ஏற்கெனவே , இரவு 10 மணி வரைதான் டாஸ்மாக் மது கடைகள் இயங்கி வருவதால், எந்த தடையுமின்றி மது விற்பனை நடக்கும் என தெரிகிறது.

அதே சமயம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் டாஸ்மாக் இயங்க வாய்ப்பில்லை.

மேலும் செய்திகள்