தமிழகம் முழுவதும் 2,530 ‘பார்'களின் டெண்டர் இறுதி செய்யப்பட்டுவிட்டது ஐகோர்ட்டில் அரசு தகவல்

தமிழகத்தில் 2 ஆயிரத்து 530 பார்களுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. 8 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக டெண்டர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-05 22:01 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான டெண்டரை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டெண்டரை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில், கொரோனா ஊடரங்கால் பல மாதங்கள் பார்கள் மூடிவைக்கப்பட்டன. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பார் நடத்திவரும் நபர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து தடையில்லாச் சான்று ஏற்கெனவே பெற்றுள்ளதால் எங்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இறுதி செய்யப்பட்டது

இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.சரவணன், ஏற்கெனவே பார் நடத்துபவர்களுக்கும் பாகுபாடின்றி டெண்டர் விண்ணப்பங்களை வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘இதுவரை தமிழகத்தில் 2 ஆயிரத்து 530 பார்களுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. 8 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக டெண்டர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கொரோனா ஊரடங்கு காலத்தில் 15 மாதங்கள் பார்கள் மூடிக்கிடந்தன. அதனால் பார் உரிமத்தை நீட்டிக்க வேண்டும். ஏற்கெனவே பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 14 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று வாதிட்டார்.

தள்ளிவைப்பு

அதையடுத்து நீதிபதி, ‘முந்தைய டெண்டர் படிவத்தையும், தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் படிவத்தையும், அதில் கூறப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் குறித்தும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்