பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு: கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும்

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு: கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.

Update: 2022-01-16 21:18 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனாலும், இந்த விஷயத்தில் இறுதி வெற்றியை எட்டுவதற்கு வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

மற்றொருபுறம், கிரீமிலேயர் வரம்பு உடனடியாக உயர்த்தப்பட வேண்டும். கிரீமிலேயர் வரம்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டில் ரூ.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கிரீமிலேயர் வருமான வரம்பு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

அடுத்து 2020-ம் ஆண்டில் அடுத்த உயர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால், 2023-ம் ஆண்டில் அதற்கு அடுத்த உயர்வு அறிவிக்க வேண்டியிருக்கும். ஆனால், 2020-ம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்தி, சமூகநீதியைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்