பொங்கல் விடுமுறைக்கு பின் தொற்று அதிகரிக்க வாய்ப்பு; அமைச்சர் அதிர்ச்சி தகவல்

பொங்கல் விடுமுறைக்கு பின் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

Update: 2022-01-18 00:13 GMT

சென்னை,



மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாள் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.  அதன்படி, எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 9 ஆயிரத்துக்கும் குறைவாகவே படுக்கைகள் நிரம்பியுள்ளன. மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கையிருப்பு உள்ளன.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து கொண்டு வருகிறது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 100 சதவீதம் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90 லட்சம் பேர் 2 வது டோஸ் தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்