கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை...!

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால், டிப்ளமோ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-18 03:54 GMT
களியக்காவிளை,

குழித்துறை அருகே உள்ள கழுவந்திட்டை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின், தொழிலாளி. இவருடைய மகள் பென்சி (வயது 19). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்வி கட்டணம் ரூ.30 ஆயிரம் பாக்கி வைத்து இருந்ததாகவும், அதை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக பென்சி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் பென்சி பேசிக்கொண்டு இருந்தார். அதன்பிறகு தூங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்று விட்டார்.

வழக்கமாக காலையில் சீக்கிரம் எழுந்து விடும் பென்சி நேற்று காலையில் படுக்கை அறையில் இருந்து எழுந்து வரவில்லை. அவருடைய தாயார் பென்சியை எழுப்ப சென்று கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது பென்சி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அதை பார்த்ததும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர், இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பென்சியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு வந்தது அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்