தமிழகத்தில் இன்று ‘பூஸ்டர் டோஸ்’ சிறப்பு முகாம்...!

தமிழகம் முழுவதும் 600 இடங்களில் இன்று ‘பூஸ்டர் டோஸ்’ போட சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

Update: 2022-01-19 23:10 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கடந்த 10-ந் தேதி முதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி எனப்படும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்தால் அவர்களது வீடுகளுக்கே சென்று ‘பூஸ்டர் டோஸ்’ போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 20 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் வரும் ஜனவரி 31-ந் தேதிக்குள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்

அந்தவகையில் தமிழகம் முழுவதும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு விரைவாக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட ஏதுவாக தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ‘பூஸ்டர் டோஸ்’ போட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த சிறப்பு முகாமுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பொது சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் 160 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 600 இடங்களில் ‘பூஸ்டர் டோஸ்’ சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்