சிறையில் அடைக்கப்பட்ட: நாமக்கல் மாற்றுத்திறனாளி இறந்தது எப்படி?

சிறையில் அடைக்கப்பட்ட: நாமக்கல் மாற்றுத்திறனாளி இறந்தது எப்படி? விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு.

Update: 2022-01-21 19:43 GMT
சென்னை,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் நடந்த நகை திருட்டு வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் என்பவரை கடந்த 11-ந்தேதி சேந்தமங்கலம் போலீசார் கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த போது அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதன்பின்பு, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபாகரனின் மரணம் தொடர்பாக சேந்தமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது. முடிவில், இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மேலும், போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறவும் புலனாய்வு பிரிவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்