சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் கேரள ஆசாமி கைது

சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் கேரள ஆசாமி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-21 23:11 GMT
சென்னை,

சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கையில் பையுடன் வந்தார். மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர் அவர் வைத்திருந்த பையை ஸ்கேனர் கருவி மூலம் சோதித்து பார்த்தார். பைக்குள் கைத்துப்பாக்கி ஒன்று இருப்பது தெரியவந்தது. 10 ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் ரெயில்வே துறையில் வேலைக்கான போலி உத்தரவு நகல்கள் ஐந்தும் அவரது பையில் இருந்தது.

உடனடியாக அந்த மர்ம நபர் பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில், பெரியமேடு போலீசார், துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் கேரள மாநிலம், கோழிக்கோடு அருகில் உள்ள கொளத்தூர் அத்தொலி தெக்கேல் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவரது பெயர் விஜயன் (வயது 60). இவர் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம், கோவையில் இருந்து சென்னை வந்துள்ளார். வேலை விசயமாக சென்னை வந்ததாக கூறியுள்ளார்.

குடியரசு தினம்

எழும்பூர் செல்வதற்காக, சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் வந்ததாகவும், அவர் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். அவர் வைத்திருந்த 10 ஏ.டி.எம்.கார்டுகள், போலியான ரெயில்வே வேலைக்கான உத்தரவு நகல்களும், போலீசாருக்கு பல்வேறு விதமான சந்தேகத்தை கொடுத்துள்ளது.

மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கி டம்மி துப்பாக்கி என்று போலீசார் நேற்று மாலை தெரிவித்தனர்.

குடியரசு தினவிழா நெருங்கும் வேளையில், கேரள ஆசாமி பிடிபட்டுள்ள இந்த சம்பவம் சென்னை போலீசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்