மாணவி லாவண்யா மரணத்தில் மதமாற்ற சாயம் பூசுபவர்கள் மீது நடவடிக்கை: கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-01-22 21:31 GMT
தஞ்சை மாவட்டம், பூதலூர் தாலுகா, மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேரி பள்ளியில் 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவி லாவண்யா, விடுதியில் தொடர்ச்சியாக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் செய்ய அளிக்கப்பட்ட நிர்பந்தம்தான் காரணம் என்பதாக ஒரு போலியான வீடியோவை பா.ஜ.க.வினர் தயாரித்து வெளியிட்டதோடு அதன் மூலமாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏழை மாணவியான லாவண்யாவின் மரணத்தை, மதமாற்ற நிர்ப்பந்தம் என இல்லாத ஒரு பிரச்சனையோடு இணைத்து தனது குறுகிய அரசியல் ஆதாயத்தை அடையத் துடிக்கும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது வலுவான கண்டனத்தை தெரிவிப்பதோடு, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழ்நாட்டில் மதத்தை வைத்து வெறுப்பு அரசியலை கிளப்பி விட முயற்சிப்பவர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடவும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்