‘வாக்கி-டாக்கி’ கோபுரத்தில் ஏறி கார் டிரைவர் தற்கொலை மிரட்டல்

நிலத்தை அபகரித்த உறவினர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் ‘வாக்கி-டாக்கி’ கோபுரத்தில் ஏறி கார் டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-01-27 21:28 GMT
பூந்தமல்லி,

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). கார் டிரைவர். திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான பூர்வீக சொத்தை உறவினர்கள் ஏமாற்றி போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ததாக தெரிகிறது. அந்த நிலத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் நிலையத்தில் நாகராஜ் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாகராஜ், நேற்று காலை மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் உள்ள ‘வாக்கி-டாக்கி’ கோபுரத்தில் ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதை கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், குடியிருப்பில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், தற்கொலை மிரட்டல் விடுத்த நாகராஜை கீழே இறங்கி வருமாறு வற்புறுத்தினர். ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுத்துவிட்டார்.

2 மணி நேரம்

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுரவாயல் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், தற்கொலை மிரட்டலில் ஈடுபட்ட நாகராஜை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.தனது நிலத்தை அபகரித்த உறவினர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகராஜ் வலியுறுத்தினர். அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நாகராஜ், ‘வாக்கி-டாக்கி’ கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். நாகராஜ் கீழே இறங்கி வந்ததும் அங்கு இருந்த தனது மனைவி மற்றும் மகளை கட்டிப்பிடித்து அழுதார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்