நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி முறைகேடு; மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியினர் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்களை காண்பித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2022-02-20 07:29 GMT
சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்ற வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சேலம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி  தேர்தல் முறைகேடு நடைபெற்றதற்கான வீடியோ ஆதாரங்களை காண்பித்து பேசினார். அப்போது  அவர் கூறியதாவது, 
 
“நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மற்றும் சென்னையில் அதிகளவு வன்முறைகள் நடந்துள்ளன. இந்த தேர்தலின் போது, சென்னையில் திமுகவினர் கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் தோல்வி பயம் காரணமாக திமுகவினர் முறைகேடுகள் செய்துள்ளனர். பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை.  

மேலும், போலீசார் முன்பாகவே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். அவர்கள் அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். மாநில தேர்தல் ஆணையமும் போலீஸ் தரப்பும் இதனை கண்டுகொள்ளவில்லை.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை. எனினும் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கும் என்று நம்புகிறோம். 

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் காரணமாகவே சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள காரணத்தால், அச்சத்தில் மக்கள் வாக்களிக்க வரவில்லை.

இது போன்ற  தேர்தல் முறைகேடு நடைபெற்ற வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும் செய்திகள்