“தடுப்பூசி போடுவதில் கடைசி இடத்தில் மயிலாடுதுறை மாவட்டம்” - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் தொடர்ந்து கடைசி இடத்தில் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-06 10:30 GMT
மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூரில் இன்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெறும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். 

இதனை தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்குள்ள நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தடுப்பூசி மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து தடுக்கும் ஒரே வழி என்று தெரிவித்தார்,

மேலும் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 92 சதவிதத்தை கடந்துள்ளதாகவும், 2-வது தவணை தடுப்பூசி எண்ணிக்கை 73 சதவீதத்தை கடந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் மயிலாடுதுறையை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 80 சதவீதத்தை நெருங்கியுள்ளதாகவும், 2-வது தவணை தடுப்பூசி 56 சதவீதம் என்ற அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்திலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் தொடர்ந்து கடைசி இடத்தில் இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்த அவர், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். 

மேலும் செய்திகள்