நாகர்கோவிலில் துணிகரம்: ஓய்வுபெற்ற ஆசிரியையை தாக்கி 6¼ பவுன் நகை பறிப்பு

நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற ஆசிரியையை தாக்கி 6¼ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-16 10:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் மரிய செல்வி (வயது 72), ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் தினமும் காலை 5.30 மணி அளவில் அருகே உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய செல்வது வழக்கம். இதே போல இன்று காலையும் மரிய செல்வி ஆலயத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர்.

அவர்கள் மாிய செல்வியின் அருகே வந்ததும் அவரை காலால் மீதித்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மர்ம நபர் வேகமாக வந்து மரிய செல்வி கழுத்தில் கிடந்த 6¼ பவுன் நகையை பறித்தார். இதை சற்றும் எதிர்பாராத மரிய செல்வி கூச்சலிட்டுள்ளார்.

இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுவிட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவிலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகள்