மதுரை: சுமார் 3 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் கைது ..!

மதுரையில் சுமார் 3 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை கடத்திய 3 பேரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-22 09:57 GMT
மதுரை,

மதுரை மாவட்டம், மேலூர் அருகே சிவகங்கை சாலையில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படையினர் இன்று அதிகாலை 2 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி அதனை சோதனையிட்டதில் காரின் உள்ளே 2.5 கிலோ திமிங்கல எச்சத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து திமிங்கல எச்சத்தை காரில் கடத்தி வந்த லிங்கவாடியை சேர்ந்த அழகு (40) , நந்தம் சீர்வீடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (38), நத்தம் பகுதியை சேர்ந்த குமார் (36) ஆகிய 3 பேரை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படையினர் பிடித்து அவர்கள் கடத்தி வந்த திமிங்கல எச்சம் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட கார் மற்றும் 10ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மதுரை வன இலாகாவினரிடம் ஒப்படைத்தனர்.

கடினமான ஓடுகளை கொண்ட கணவாய் மீன்களை சாப்பிடும்போது அதை செரிப்பதற்காக திமிங்கலத்தின் உடலில் ஒருவகையான மெழுகு போன்ற பொருள் சுரக்கும். இதுவே திமிங்கல எச்சம் என அழைக்கப்படுகிறது. இந்த திமிங்கல எச்சம் கடலில் இருந்தும், கடற்கரையோரங்களில் இருந்தும் எடுக்கப்படுகிறது.

இது மருந்து மற்றும் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகிறது. இதனால் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ திமிங்கல எச்சம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடத்திவரப்பட்ட 2.5 கிலோ திமிங்கல எச்சம் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என்பதால் இந்த எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது ? இதில் யாருக்கு தொடர்பு உள்ளது ? என்பது குறித்து மதுரையில் உள்ள வன இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.







மேலும் செய்திகள்