நாகை: பல நாள் ஆடு திருடன் - சி.சி.டி.வி கேமரா உதவியுடன் பிடித்த பொதுமக்கள்

நாகையில் பல நாட்களாக ஆடு திருடி வந்த திருடனை சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் பிடித்த பொதுமக்கள், போலீசிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-03-22 10:25 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் 3000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாகும். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளன. இதுகுறித்து புஷ்பவனம் கிராமத்து மக்கள் வேதாரணியம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்களை கொடுத்து உள்ளனர். ஆனால் இது வரை ஆடு திருட்டு வழக்கில் எவரையும் கைது செய்யவில்லை.

இந்தநிலையில் புஷ்பவனத்தை சேர்ந்தமுத்து கிருஷ்ணன் என்பவர் வீட்டில் வளர்த்து வந்த ஆடு நேற்று திருட்டு போயுள்ளது. இதுகுறித்து முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் அந்த தெருவில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆடு திருடிச்செல்வதை பார்த்து உறவினர்களுடன் விசாரித்துள்ளனர். அதில் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (வயது 46) என்பவரை பிடித்து புஷ்பவனம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உட்கார வைத்தனர்.

பின்பு கண்ணன் ஆடு திருடியதை உறுதிசெய்த ஊர் பொதுமக்கள் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். வேதாரணியம் போலீசார் கண்ணனை அழைத்து வந்து ஆடு திருடிய வழக்கில் வழக்கு பதிவு செய்து அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இரவு கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

மேலும் செய்திகள்