சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை - கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-03-30 03:24 GMT
கோவை, 

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள குமரன்குன்று பகுதியை சேர்ந்தவர் அனித்குமார் (வயது 24). இவர் வீட்டு உள் அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். அனித்குமார் வீட்டின் அருகில் வசித்து வந்த 14 வயது சிறுமி சம்பவத்தன்று தனியாக வீட்டில் இருந்துள்ளாள்.

அப்போது அவளது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அனித்குமார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அனித்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், அனித்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.இதைத்தொடர்ந்து அனித்குமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ரஷீதா ஆஜர் ஆகி வாதாடினார்.

மேலும் செய்திகள்