லாரி மீது கார் மோதி விபத்து - பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் உயிரிழப்பு....!

திருவண்ணாமலை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.;

Update:2022-04-16 15:45 IST
போளூர், 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேலந்தாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது 68). ஒய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவரது மனைவி, மகன், மகள் என 4 பேர் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நேற்று காரில் சென்றனர்.

காரை ரமேஷ் என்பவர் ஒட்டினார். கிரிவலம் முடித்துவிட்டு இன்று அதிகாலை ஊருக்கு காரில் சென்ற போது, போளூர் சாலையில், வெண்மணி அருகே எதிரில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் டிரைவர் ரமேஷ்(40) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மற்ற 4 பேரும் படுகாயத்துடன் காரில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கூக்குரலை கேட்ட பொதுமக்கள் அவர்களை மீட்டனர்.

தகவலறிந்த போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், ஏட்டு ஏழுமலை விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் டிரைவர் ரமேஷ் உடலை மீட்டனர்.

படுகாயமடைந்த 4 பேரை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்து, வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காவேரி(55) உயிரிழந்தார். 

இவர் குடியாத்தம் அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகள் மோனிகா பிரிதி(23) மகன் ராமபிரசாத்(25) தந்தை சேகர் ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்