பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம்! ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி

அவசர ஆவண பதிவிற்காக, அவசர ஆவண பதிவிற்காக, பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும்.

Update: 2022-04-28 10:35 GMT
சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் 2021-22-ஆம் ஆண்டிற்கான வணிக வரி மற்றும் பதிவுத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. 

தமிழக சட்டசபையில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்பு:-

“அவசர ஆவண பதிவிற்காக, பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும்.தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும். முதல் கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

பதிவு செய்யப்பட்ட திருமண சான்றுகளை இணையம் வழியாக விண்ணப்பித்து திருத்தம் செய்யும் வசதி ரூ.60 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

சென்னை மற்றும் மதுரையில் இரண்டு பதிவு மண்டலங்கள் உருவாக்கப்படும்.சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை மையமாக வைத்து கூடுதலாக ஒரு புதிய மண்டலம் அமைக்கப்படும்.

பதிவுத்துறையில் கட்டிடக்கலை பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு “களப்பணி மேற்பார்வையாளர் உரிமம்” வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும். சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படும்.” 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், அரசின் முயற்சி காரணமாக 36 ஆயிரத்து 952 வணிகர்கள் புதிதாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர் என வணிகவரித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்