ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

சென்னையில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த 31 நாட்கள் நடந்த கஞ்சா வேட்டையில் 2,423 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-29 00:15 GMT
சென்னை,

சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை கஞ்சா பொட்டலங்களுடன் போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களது பெயர் முகமது உசேன் (வயது 20), ஜெயேந்திரர் ராஜூ (21) என்பதாகும். சென்னை மண்ணடியைச் சேர்ந்த அவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைன் மூலம் தகவல் சொன்னால், உணவு சப்ளை செய்வது போல, மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கொண்டு வந்து கொடுத்து விட்டு போவார்கள், என்று தெரிவித்தனர். அதுபோல செல்போனில் தகவல் சொன்னவுடன் கொடுங்கையூரைச் சேர்ந்த ஹரி (33) என்பவர் அடுத்த அரைமணி நேரத்தில் கஞ்சா பொட்டலங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாம்பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10½ கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும்

தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 31 நாட்களில் தமிழகம் முழுவதும் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,562 கிலோ கஞ்சா அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 197 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதுபோல 6,319 குட்கா போதைப்பொருள் வியாபாரிகள் கைதாகி உள்ளனர். அவர்களிடம் இருந்து 45 டன் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்