போலீஸ் விசாரணையில் இறந்த கைதி உடலில் 13 இடங்களில் காயங்கள்

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கைதி விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-05-04 23:09 GMT
சென்னை,

சென்னையில் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த கைதி விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 20-ந்தேதி நடந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியின் தடயவியல் துறை இணை பேராசிரியர் கே.வி.வினோத், உதவி பேராசிரியர் முரளிதரன் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த நிலையில் விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் அவர் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

காயங்கள், கீறல்கள்

பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் வருமாறு:-

விக்னேஷின் இடது கை தோள்பட்டையின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் எலும்பில் காயம் உள்ளது. உடம்பின் பின்பகுதியில் சில இடங்களில் ரத்த நுண்குழாய்கள் சிதைந்துள்ளன. தொடையின் பின்பகுதியில் சிராய்ப்பு காயங்கள் உள்ளன. வலது காலின் கீழ் மூட்டு பகுதியில் தொடங்கிய காயம் தொடையின் நடுப்பகுதி வரை உள்ளது.

இடது காலின் கீழ் மூட்டு பகுதியில் தொடங்கும் காயம் தொடையின் கீழ்ப்பகுதி வரை செல்கிறது. வலது காலின் அடிப்பகுதியிலும் காயம் உள்ளது. காயம் உள்ள பகுதியில் ரத்தம் அடர்சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. மார்பகம், அடிவயிறு, சிறுநீரகம், முதுகு தண்டுவடம் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடலின் பல்வேறு இடங்களில் கீறல்கள் காணப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலீசார் சித்ரவதைதான் விக்னேஷ் உயிரிழப்புக்கு காரணம் என்று அவரது உறவினர் குற்றம்சாட்டிவரும் வேளையில், அவர் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகி உள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்