அண்ணாமலை பல்கலைக்கழகம் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

அண்ணாமலை பல்கலைக்கழகம் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-05-07 00:41 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தொடர்ந்து 9-வது நாளாக இன்றும் (நேற்றும்) போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு, பகல் பாராமல் போராடி வரும் அவர்களுடன் பேச்சு நடத்தக்கூட பல்கலைக்கழக நிர்வாகம் முன்வராதது கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழக பணியாளர்கள் ஏப்ரல் 27-ந்தேதி போராட்டத்தை தொடங்கியபோது, துணைவேந்தர் இல்லாத நிலையில் பொறுப்பு பதிவாளர் பேச்சு நடத்தியுள்ளார். அது வெற்றி பெறவில்லை. அதன்பின் இன்று 9-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், துணைவேந்தரோ அல்லது வேறு பிரதிநிதியோ அவர்களை அழைத்து பேசி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது பல்கலைக்கழகத்தின் அலட்சிய தன்மையையும், மிரட்டிப் பணிய வைக்கும் போக்கையும்தான் காட்டுகின்றன. இது சரியானது அல்ல.

அண்ணாமலை பல்கலைக்கழக பணியாளர்கள் மிகவும் வறிய நிலையில் இருப்பவர்கள். அவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் காட்ட வேண்டியது கருணைதானே தவிர, ஈகோ அல்ல. அதனால், அவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் அழைத்துப்பேசி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்