கழிவுநீர் அகற்றும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்த சட்டமசோதா சட்டசபையில் அமைச்சர் அறிமுகம்

தமிழகத்தில் கழிவுநீர் அகற்றும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமசோதாவை சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்துள்ளார்.

Update: 2022-05-09 23:24 GMT
சென்னை,

கழிவுநீரை அகற்றும் அமைப்பு மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் தொழிலாளர்கள் நுழைவதை தடை செய்து 2010-ம் ஆண்டு அரசு ஆணையிட்டுள்ளது. அவற்றை அகற்றுவதற்கான எந்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

கழிவுநீர் மேலாண்மையை பொறுத்தவரை, சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் நிலத்தடி கழிவுநீர் அகற்றுவது மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அதிக முன்னுரிமை அளித்துள்ளது.

சொத்துவரி உயர்வு

அதன்படி, ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்ந்துவதற்கு நகராட்சி நிர்வாக மன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. மேலும், நகராட்சி நிர்வாக மன்றம், தீர்மானத்தின் மூலம் அவ்வப்போது அரசால் அறிக்கை செய்யப்படும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வீதங்களுக்கு சொத்துவரியை உயர்த்தலாம்.

திறந்த வெளி மற்றும் நீர் நிலைகளில் மலம் மற்றும் கழிவுநீரை பாகுபாடின்றி வெளியேற்றுவது சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மலம் மற்றும் கழிவுநீரின் பாதுகாப்பான வெளியேற்றுதலை உறுதி செய்வதற்கு, சரக்கு வண்டிகள், இழுவை வண்டிகள் அல்லது கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குளங்களின் வெளியேற்றுதலுக்காக பயன்படும் பிற வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்தை ஒழுங்குமுறைப்படுத்துதல் தவிர்க்க முடியாததாகும்.

அபராதம்

எனவே மலம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் தேசிய கொள்கைக்கு ஏற்ப ஒரு விரிவான செயல்திட்டத்தை அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் 1978-ம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சட்டம் தொடர்பான சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்காக இந்த சட்டமசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி கழிவுநீர் தொட்டியில் அல்லது அங்குள்ள துப்புரவு அமைப்பில் அபாயகரமாக சுத்தம் செய்தலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த நபரும் ஈடுபடவில்லை என்பதை உரிமையாளர் உறுதிசெய்ய அறிவுறுத்தப்படுகிறது. இச்சட்டத்தில் விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை மீறினால் முதல் குற்றத்திற்காக 25 ஆயிரம் ரூபாயும், 2-வது முறை குற்றம் செய்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வரை நீட்டிக்கப்படலாம். அவர் அபராதத்தொகையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டமசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்