4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு: இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணி தீவிரம்

4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழு: இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணி தீவிரம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்.

Update: 2022-05-12 21:13 GMT
சென்னை,

இலங்கையில் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்துதலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-

இலங்கைக்கு பொருட்கள் அனுப்ப 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய 2 இடங்களில் இருந்தும் பொருட்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் பொருட்களை அனுப்ப அரசு தீவிர ஏற்பாடுகளை மேற்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் குழுவில் வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் மேலாண்மை இயக்குநர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண்மை இயக்குனர் என்.சுப்பையன் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, மத்திய அரசுடன் இணைந்து இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு அவ்வப்போது அதுதொடர்பான அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த நிவாரணப் பொருட்களை பார்சல் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பார்சல்களில் இந்திய மற்றும் தமிழக அரசுகளின் அரச முத்திரைகள் இடம்பெற்றுள்ளன. ‘தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்’ என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்