அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா - தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் இடம்பெற்றுள்ள புதிய வசதிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-14 07:21 GMT
சென்னை, 

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் 20.304 பேருந்துகள் 10,417 வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பொது போக்குவரத்தை ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.

மேலும், பெண்களுக்கான இலவச போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பெண்கள் பயணம் செய்யும் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக 22 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2,500 பேருந்துகளில் சிசிடிவி, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமிரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்துகளில் புதிய வசதிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சியில் மூலம் தொடங்கி வைத்தார்.

புதிய வசதிகள் இடம்பெற்றுள்ள பேருந்துகளில் 3 சிசிடிவி கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய வசதிகள், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்படும்போது, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்கவும், குற்றச்செயல்களை குறைப்பதற்கும் முக்கிய அங்கமாக செயல்படும்.

மேலும் செய்திகள்