ரூ.27 ¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடர்பு முகாம் பயனாளிகளுக்கு ரூ.27 ¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

Update: 2023-09-27 18:45 GMT

பொறையாறு:

மக்கள் தொடர்பு முகாம் பயனாளிகளுக்கு ரூ.27 ¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

மக்கள் தொடர்பு முகாம்

பொறையாறு அருகே திருவிளையாட்டம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். நிவேதா முருகன் எம்.எல்.ஏ., வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி, சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மக்கள் தொடர்பு முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் கூறுகையில் மக்களைத்தேடி அரசுத்துறை அலுவலர்கள் நேரில் வந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் தொடர்பு முகாமில் துறை சார்ந்த அலுவலர்கள் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறுவார்கள். தமிழ்நாடு அரசானது அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது.

நலத்திட்ட உதவிகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது எனவே பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் பயன்பாடற்ற பழைய டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள் போன்றவைகளில் நீர் தேங்காதவாறு அப்புறபடுத்த வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு டெங்கு கொசு ஒழிப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

தொடர்ந்து வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 122 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 87 ஆயிரத்து 214 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை உதவி வேளாண்மை இயக்குனர் சுப்பையன், தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் ஞானவேலன், செம்பனார்கோவில் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பாஸ்கர், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முகாமில் செம்பனார்கோவில் வட்டார வேளாண்மைதுறை, தோட்டக்கலை துறை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சித்தமருத்துவம், கால்நடைத்துறை ஊட்டச்சத்து ஆகிய துறைகள் சார்பில் தனித்தனி ஸ்டால்கள் அமைத்து அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்