பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை - ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - ராமதாஸ்

அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நன்னடத்தை வகுப்பை கட்டாயமாக்க வழிவகை செய்ய வேண்டுமென ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-08 18:23 IST

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்.

நடுரோட்டில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டது தமிழகத்தின் சமுதாய சீரழிவை வெளிப்படுத்துகிறது. மாணவரை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், இனாம் கிளியூர் ஊராட்சி, வடக்கு தெருவை சேர்ந்த ஞானசேகரன் ராஜலட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் நாகராஜ் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகன் கவியரசன் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், கடந்த 4-ம் தேதி பள்ளி விட்டு வீடு திரும்பிய கவியரசனை நடுரோட்டில் 11-ம் வகுப்பு மாணவர்கள் 15-பேர் தாக்கியதில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவனுக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் முன்னேற்றம் இல்லாததால் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தநிலையில் சிகிச்சையில் இருந்த கவியரசன் உயிரிழந்தார். இந்தசூழலில் மாணவனை தாக்கிய 15 சக மாணவர்கள் மீது அடிதடி, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு முக்கிய காரணம் போதைப் பழக்கமும், கட்டுப்பாடு இல்லாத வளர்ப்பு முறையும் என்பது தெரிகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் இத்தகைய சிந்தனை வளர்ந்துள்ளது சமுதாயத்தின் சீரழிவை காட்டுகிறது. இதனை தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் உணர வேண்டும். பள்ளிகளில் நன்னடத்தை வகுப்புகளை முறையாக செயல்படுத்தாததே காரணம். அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நன்னடத்தை வகுப்பை கட்டாயமாக்க வழிவகை செய்ய வேண்டும்.

உயிரிழந்த மாணவர் குடும்பம் தற்போது நிற்கதியாக உள்ளது. தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் இப்படி ஆகிவிட்டதே என்ற வேதனையில் குடும்பத்தினர் உள்ளனர். இந்த நிலைக்கு தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் காரணம் என்ற நிலையில் இறந்த மாணவரின் குடும்பத்திற்கு அரசு ரூ. 50 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.

குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீண்டும் அத்தகைய செயலில் ஈடுபடாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற காலங்களில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே இத்தகைய பிரச்சனை ஏற்படாத வகையில் கல்வித்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்