கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 13-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

மின்னஞ்சலில் வந்த மிரட்டலில் நடிகை நிவேதா பெத்துராஜ் பெயரும், கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.;

Update:2025-12-08 18:56 IST

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 12 முறை இ-மெயில் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அப்போது வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் அந்த மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

இந்த நிலையில் இன்று மாலை கலெக்டர் அலுவலகம் வழக்கம்போல் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக முகவரிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் நடிகை நிவேதா பெத்துராஜ் பெயரும், ‘கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக ஊழியர், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயல் இழப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அனைத்து அறைகளிலும் சல்லடை போட்டு தேடினர். ஒரு மணி நேரம் சோதனை நடந்த நிலையில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் புரளிய என்பது தெரியவந்தது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இ-மெயில் வந்த முகவரியை வைத்து அவர் யார்? எங்கிருந்து வந்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 13-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்