ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி கோரிய மனு; ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு

ராஜ ராஜ சோழன் அங்கு தான் புதைக்கப்பட்டார் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை என கோர்ட்டு தெரிவித்தது.;

Update:2025-12-08 21:19 IST

மதுரை,

தஞ்சாவூர் அரண்பணி அறக்கட்டளை செயலர் தியாக ராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்ட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-

மனுதாரர் தரப்பில் தாங்களே தங்களது சொந்த பணத்தில் மணிமண்டபம் கட்டிக்கொள்ளவதாகவும், அதற்கான அனுமதி வழங்க கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள இடம் கும்பகோணம் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமானது என அதன் செயல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அங்கு ராஜ ராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கு எவ்விதமான ஆவணங்களும் இல்லை என்றும், அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர், ராஜ ராஜ சோழன் அங்கு தான் புதைக்கப்பட்டார் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. எனவே மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது. அதே சமயம் ராஜராஜ சோழன் அங்கு தான் அடக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான ஆவணங்களை மனுதாரர் சமர்ப்பித்தாலும், அது தொடர்பாக கொள்கை முடிவெடுக்க வேண்டியது அரசே. அதில் கோர்ட்டு தலையிட இயலாது.

இவ்வாறு கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்