மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம்

வெண்ணந்தூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Update: 2023-06-23 18:45 GMT

வெண்ணந்தூர்

மதிய உணவு

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே நடுப்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளன. இந்த பள்ளியில் சுமார் 190 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முட்டையுடன் சாதம், சாம்பார் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் அந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 27 பேர் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

இதைக்கண்ட பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு அங்குள்ள அறமத்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்றனர். மேலும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகளை பள்ளிக்கு அழைத்து வந்து பலருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சாலை மறியல்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பெற்றோர்கள் பதறி அடித்து மருத்துவமனைக்கு சென்று தங்கள் குழந்தைகளை பார்த்தனர். மேலும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்காததை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பள்ளியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து ராசிபுரத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் சாலையில் அவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெண்ணந்தூர் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜி, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, ராசிபுரம் தாசில்தார் சுரேஷ், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இது சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்