தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது

தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 62 பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2023-03-31 09:52 GMT

நகை- பணம் கொள்ளை

சின்ன காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே உள்ள கண்ணப்பன் தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. தொழில் அதிபரான இவர் ரங்கசாமிகுளம் பகுதியில் கட்டுமான தொழிலுக்கான பிரபல ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 13-ந்தேதி தனது மனைவி, மகனுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணமாக சுவிட்சர்லாந்து சென்று விட்டு கடந்த 21-ந்தேதி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 150 பவுன் தங்க நகை மற்றும் 5½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவர் விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்திட உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியஸ் சீசர் மேற்பார்வையில் விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் மாவட்ட போலீசார் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பலமுறை அந்த வழியாக நோட்டமிட்டவாறு சென்ற ஓரிக்கை பகுதியை சேர்ந்த பாலுசெட்டிச்சத்திரம் போலீஸ் நிலைய பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குணசேகரன் (26), என்பவரை பிடித்து விசாரண மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த சகோதரர்களான ராஜன் (47), சிவ விநாயகம் (44) ஆகியோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 62 பவுன் தங்க நகைகள் குணசேகரன் வீட்டின் அருகிலும் மற்றும் வெம்பாக்கத்தில் உள்ள கிணற்றில் வீசி செல்லப்பட்ட ஒரு கிலோ கவரிங் நகைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்