கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மணக்குடி மற்றும் அருமனை பகுதிகளில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
நாகர்கோவில்,
மணக்குடி மற்றும் அருமனை பகுதிகளில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் ரோந்து
குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மணக்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மறைவான இடத்தில் ஏராளமான மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூடைகளை சோதனை செய்தபோது, அவற்றில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அருமனை
இதேபோல், உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் அருமனை குஞ்சாலுவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிறு, சிறு மூடைகளில் 1,080 கிலோ ரேஷன் அாிசி இருந்ததும், அவற்றை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து டெம்போவுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், டெம்போ டிரைவரான நீலகிரி மாவட்டம் பழந்தோட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.