ராமநாதபுரத்தில் கனமழை: அரசுப் பள்ளியை சூழ்ந்த வெள்ளம் - மாணவர்கள் அவதி
ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் பள்ளி வளாகம் நீரில் மூழ்கும் நிலை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து பல மணி நேரத்திற்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வகையில், ராமநாதபுரத்தில் உள்ள பொட்டகயவல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பள்ளியில் அருகே உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இதுபோல் பள்ளி வளாகம் நீரில் மூழ்கும் நிலை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மாணவர்களும், ஆசிரியர்களும் முழங்கால் அளவு தேங்கிய நீரில் நடந்து பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளியை சுற்றி சுமார் 200 மீட்டர் தூரம் வரை மழைநீர் தேங்கியுள்ளது. அதில் இறங்கி நடந்து, நனைந்த உடைகளுடன் பள்ளிக்கு செல்ல வேண்டியிருப்பதால் மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.