மணல் திருட்டுக்கு எதிராக போராடிய 22 விவசாயிகள் மீது பொய் வழக்கு - சீமான் குற்றச்சாட்டு
அப்பாவி விவசாயிகளை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதுதான் திராவிட மாடலா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தி.மு.க.வின் இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக சரளை மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 22 விவசாயிகளை பொய்வழக்கில் கைது செய்து தி.மு.க. அரசு சிறையில் அடைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தன்னுடைய தவறுகளை மூடி மறைக்க ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, அடக்குமுறையை ஏவி மண்ணையும், மண்ணின் வளங்களையும் காக்கப் போராடும் வேளாண்பெருங்குடி மக்களை சிறைப்படுத்துவது கொடுங்கோன்மையாகும்.
திருவண்ணாமலையில் கடந்த 14.12.25 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெற்ற இடத்தை சமப்படுத்துவதற்காக திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலப்பம்பாடி ஏரியிலிருந்து 2,000 லோடு சரளை மண் சட்டவிரோதமாக திருடப்பட்டு, தி.மு.க.வினருக்கு சொந்தமான அருணாச்சலேஸ்வரா சர்க்கரை ஆலை வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி ஏரிக்கரையில் 30 அடி தார் சாலையும் அமைக்கப்பட்டது.
இம்முறைகேடுகளை எதிர்த்து உழவர் உரிமை இயக்கம் சார்பாக தம்பி அருள் ஆறுமுகம் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு மனு கொடுத்தும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியும் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து உழவர் உரிமை இயக்கத்தின் சார்பில் 14.12.25 அன்று 2000 விவசாயிகளை ஒன்று திரட்டி மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
தி.மு.க.வின் திருட்டுத்தனத்தைத் தோலுரிக்கும் அப்போராட்டத்தை முடக்கும் நோக்கத்துடன், முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தி.மு.க. அரசு காவல்துறையை ஏவி உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகளின் அலைபேசியைப் பறித்துக்கொண்டு, அதிகாலையிலேயே கைது செய்து போளூர் காவல் நிலையத்தில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு முடிந்ததும் விடுதலை செய்யப்படுவார்கள் என முதலில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், திடீரென போளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயி அருள் ஆறுமுகம் தலைமையில் சட்டவிரோதமாகக் கூடியதாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டதாகவும் காவல் உதவி ஆய்வாளர் அளித்த பொய் புகாரின் பேரில் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தற்போது 22 விவசாயிகளையும் வேலூர் சிறையில் தி.மு.க. அரசு அடைத்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.
ஏற்கனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத பெரும் கொடுமையாக தம்பி அருள் ஆறுமுகம் உள்ளிட்ட ஏழு விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து துன்புறுத்திய தி.மு.க. அரசு, கடும் எதிர்ப்பிற்கு அஞ்சி 6 பேர் மீதான குண்டர் சட்டத்தைத் திரும்பப்பெற்ற போதும், தம்பி அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் திரும்பப்பெற மறுத்தது. தற்போது அருள் ஆறுமுகத்தை குறிவைத்து தொடரும் அடக்குமுறைகள் யாவும் கடந்தகால அரசியல் காழ்ப்புணர்வின் நீட்சியேயாகும்.
ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இதே தம்பி அருள் ஆறுமுகத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நிலத்தையும் நீர்நிலைகளையும் காப்பதற்கு விவசாயியாக இருக்க வேண்டியதில்லை, நெஞ்சில் ஈரம் இருந்தால் போதும் என்று பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே, தம்பி அருளை குண்டர் சட்டத்தில் அடைக்கும்போது உங்கள் நெஞ்சின் ஈரம் எங்கே போனது? ஆட்சி அதிகாரம் இல்லாதபோது உங்கள் நெஞ்சில் இருந்த ஈரம், பதவி, பகட்டு வந்தவுடன் வறண்டு போனது ஏன்?
பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருள் விற்போர் உள்ளிட்ட கொடுங்குற்றவாளிகளை கைது செய்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த திறனற்ற தி.மு.க. அரசு, அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்குத் தொடுத்து கைது செய்து சிறையில் அடைப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் வேளாண்மையும், விவசாயிகளையும் தி.மு.க. அரசு பாதுகாக்கும் முறையா? இதுதான் தி.மு.க. அரசு மண் காக்கும், மானம் காக்கும் முறையா? பேரவலம்!
‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை’ எனும் வள்ளுவப்பாட்டன் வாக்கிற்குக்கிணங்க பயிர் வளர்த்து உயிர் காக்கும் விவசாயிகளை கொடுஞ்சிறையில் அடைப்பது பஞ்சத்தில் நாடு நாசமாகவே வழிவகுக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.