திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை - நயினார் நாகேந்திரன்

தமிழக இளைஞர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யாதது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.;

Update:2025-12-18 17:54 IST

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலைக்கழகங்களில் 12-ல் 40%-க்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட ஆசிரியப் பணியிடங்களும், மீதமுள்ள 9 பல்கலைக்கழகங்களில் 15%-40% வரையிலான ஆசிரியப் பணியிடங்களும் காலியாக உள்ளதெனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

அதிலும் குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய தமிழகத்தின் மிகத் தொன்மையான முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் பாதிக்குப் பாதி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள தகவல், திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான அப்பட்டமான சான்று.

அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்விக் கூடங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதராமல், தரமான கட்டடங்களைக் கட்டி எழுப்பாமல், போதிய ஆசிரியர்களை நிரப்பாமல், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று விளம்பர விழா எடுப்பதற்குத் திமுக அரசு வெட்கப்பட வேண்டும்.

தனது பிள்ளைக்குப் பதவி கிடைப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு அதில் வெற்றி கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக இளைஞர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யாதது ஏன்? படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பும், படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எதிர்காலமும் உள்ளடங்கிய இவ்விவகாரத்தைத் திமுக அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது? உயர்கல்வித்துறையின் உயிர்நாடியை ஒடுக்கி தமிழக இளைஞர்களின் கல்விக் கனவை சாம்பலாக்குவது தான் திமுகவின் சமூகநீதியா?”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்