வாலிபரை தாக்கிய 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
வாலிபரை தாக்கிய 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேவகோட்டை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது;
தேவகோட்டை அருகே உள்ள நயினார்வயல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 35). அதே கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்(38). 2 பேரும் உறவினர்கள். இவர்கள் 2 பேருக்கும் இடையே நில பிரச்சினை இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு இரும்பு கம்பியால் தன்னை கடுமையாக தாக்கி காயப்படுத்தியதாக தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன்பேரில் ரமேஷ் மற்றும் வெள்ளைச்சாமி (62) ஆகியோர் மீது தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாரிமுத்து குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் மற்றும் வெள்ளைச்சாமிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்வேலவன் ஆஜரானார்.