வங்கி மேலாளருக்கு 3 ஆண்டு சிறை
போலி ஆவணம் தயாரித்து வங்கியில் கடன் பெற்று ரூ.1.41 கோடி மோசடி செய்த வழக்கில் மேலாளர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்தது.;
போலி ஆவணம் தயாரித்து வங்கியில் கடன் பெற்று ரூ.1.41 கோடி மோசடி செய்த வழக்கில் மேலாளர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ரூ.1.41 கோடி மோசடி
கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சீனியர் மேலாளராக வெள்ளைச்சாமி (வயது 61) என்பவர் பணியாற்றினாா்.
இவர் பணியில் இருந்த காலத்தில் வங்கியில் சென்னை சாலிக்கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பவர், தரகர் பொம்மையா (36) என்பவரின் உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து விவசாய கடன் பெற்றதாக தெரிகிறது.
இதற்கு மேலாளர் வெள்ளைச்சாமி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
சக்திவேல், தரகர் பொம்மையா உதவியுடன் போலியாக ஆவணம் சமர்பித்து விவசாய கடன் பெற்று, அந்த தொகையை மாற்று தேவைக்கு பயன்படுத்தியதாகவும், அதனால் ரூ.1 கோடியே 41 லட்சம் வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சென்னை சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
3 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை கோவை சி.பி.ஐ. கோா்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் சீனியர் மேலாளர் வெள்ளைச்சாமி, விவசாய கடன் பெற்ற சக்திவேல், போலியாக ஆவணம் தயாரிக்க உதவியதாக தரகர் பொம்மையா ஆகிய 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், சக்திவேலுக்கு ரூ.50 ஆயிரமும், வெள்ளைச்சாமிக்கு ரூ.80 ஆயிரமும், தரகர் பொம்மையாவுக்கு ரூ.20 ஆயிரமும் அபராதம் விதித்து நீதிபதி கோவிந்தராஜ் தீர்ப்பளித்தார்.