அரசியலில் கமல்ஹாசனை விட மோசமான நிலைக்கு விஜய் தள்ளப்படுவார்: வேலூர் இப்ராஹிம்
சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வெற்றி பெறும் என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.;
கோவை,
பா.ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராஹிம். இவர் தொழுகைக்காக கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு சென்றார். அப்போது அவருக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அந்த பள்ளிவாசலில் நடந்த ஜும்மா தொழுகையில் அவர் கலந்துகொண்டார்.
பின்னர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நான் பல்வேறு ஊர்களுக்கு தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்லும்போது எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கோவையில் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதித்தனர். உரிய நடவடிக்கை எடுத்த போலீஸ் கமிஷனருக்கு நான் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். நடிகர் விஜய் ஓட்டுக்களை பிரிப்பதற்காக அரசியல் களத்தை பயன்படுத்த கூடாது. தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால் அவரும் பா.ஜனதா கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் அரசியலில் கமல்ஹாசனை விட மோசமான நிலைக்கு தள்ளப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.