காதல் வலையில் வீழ்த்தி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.;
திருப்பூர்,
திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, திருப்பூர் மாநகரில் பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த மாணவிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மாணவியின் பெற்றோர், மாணவியை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு, மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனைக்கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுகுறித்து மாணவியின் தாயார் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.