சென்னை தனியார் விடுதியில் குடிபோதையில் 30 இளம் பெண்கள் ஆபாச நடனம்

சென்னை தனியார் விடுதியில் குடிபோதையில் ஆபாச நடனம் ஆடிய 30 இளம் பெண்கள் போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2022-09-12 05:30 GMT

சென்னை:

சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. மேலும் ஓட்டல்கள், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தடை உள்ளது. ஆனால் சென்னையில் பல இடங்களில் பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி நள்ளிரவு மது விருந்து மற்றும் அரைகுறை ஆடையுடன் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ராயப்பேட்டை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் பார் வசதிகளுடன் கூடிய தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நள்ளிரவில் மது விருந்துகளுடன் பெண்கள் ஆபாச நடனம் மற்றும் குத்தாட்டம் போடுவதாக அண்ணாசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டு இருந்தனர். குடிபோதை தலைக்கேறி மதுமயக்கத்தில் இருந்த அந்த இளம்பெண்கள் அங்கு இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனமாடி குத்தாட்டம் போட்டனர்.

இதைப்பார்த்த போலீசார் உடனடியாக அங்கு இசைக்கப்பட்ட ஆடியோவை நிறுத்தினார்கள். அங்கு மதுபோதையில் சுய நினைவின்றி நடனமாடிய 30 பெண்களையும் போலீசார் மீட்டனர். போதையில் இருந்த 30 இளம்பெண்களின் முகவரி, செல்போன் எண்கள் ஆகியவற்றை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை எச்சரித்து ஆட்டோவில் போலீசார் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கு போதையில் இருந்த வாலிபர்களையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள். அதன் பிறகு தடை செய்யப்பட்ட நள்ளிரவு நடன மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த தனியார் விடுதி உரிமையாளர், மேலாளரை போலீஸ் நிலையத்துக்கு வந்து விளக்கம் அளிக்குமாறு போலீசார் கூறிவிட்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட இரவு நடன விருந்து நடத்திய தனியார் விடுதி நிர்வாகம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்