ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தந்தை-மகன் உள்பட 3 பேரை கைது செய்யப்பட்டனர்;
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தந்தை-மகன் உள்பட 3 பேரை கைது செய்யப்பட்டனர்.
புகையிலை பொருட்கள்
கோவை மாநகர பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் செல்வபுரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பொன்னையராஜபுரம் ரோடு செல்வவிநாயகர் கோவில் அருகே ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று, அந்த வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். அங்கு ஏராளமான காகித பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் திறந்து பார்த்த போது பண்டல் பண்டல்களாக புகையிலை பொருட்கள் இருந்தன.
ரூ.5 லட்சம்
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கிருந்த 470 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 456 ஆகும். அதைத்தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் ரமேஷ்பாய் (வயது 52), அவரது மகன் சுபம் பாய் (27) மற்றும் அனுபம் திவாரி (19) என்பதும், அவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.