கிருதுமால் நதியில் மாட்டுவண்டியில் மணல் திருடிய 6 பேர் கைது

நரிக்குடி அருகே கிருதுமால் நதியில் மாட்டு வண்டியில் மணல் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-26 18:45 GMT

காரியாபட்டி,

மணல் திருட்டு

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பள்ளப்பட்டி கிருதுமால் ஆற்றுப்பகுதியில் இரவு மற்றும் ஆள் நடமாட்டமில்லாத பகல் நேரங்களில் அடிக்கடி மணல் திருடப்பட்டு வருவதாக நரிக்குடி போலீசாருக்கும், திருச்சுழி வருவாய்த்துறைக்கும் அடிக்கடி புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் ஆதித்தனேந்தல் கிராம நிர்வாக அலுவலர் தென்னரசு தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் திருச்சுழி துணை சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் போலீசார் நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நரிக்குடி அருகே உள்ள பள்ளப்பட்டி கிருதுமால் ஆற்றுப்பகுதியில் அரசு அனுமதியின்றி சிலர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் போலீசாரை கண்டதும் மணல் அள்ளியவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். தப்பி ஓட முயன்ற அனைவரையும் சுற்றி வளைத்த நரிக்குடி போலீசார் மணல் அள்ளியவர்களை நரிக்குடி போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

6 பேர் கைது

விசாரணையில் நரிக்குடியை சேர்ந்த சந்திரன் மகன் குமார் (வயது 29), கல்யாணசுந்தரம் மகன் ராஜபாண்டி (27), பள்ளப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் திருப்பதி (48), என்.முக்குளத்தை சேர்ந்த பாண்டி மகன் அழகுசுந்தரம் (26), பழனிச்சாமி மகன் வேலுச்சாமி (54), சமயன் மகன் ராஜா (49) ஆகியோர் என்பது தெரியவந்தது. அரசு அனுமதியின்றி மணல் திருடிய 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 5 மாட்டுவண்டிகளையும் மணலுடன் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்